தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, டெல்லியில் வருகிற மே 5 ம் தேதியன்று,பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது.இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக,`தேசிய தீவிரவாத தடுப்பு மையம்'ஒன்றை அமைக்க சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது. 

இந்த மையம் அமைப்பது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறி, ஜெயலலிதா,நரேந்திர மோடி,நிதிஷ்குமார்,நவீன் பட்நாயக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் 10-க்கும் அதிகமான மாநிலங்களின் முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். 

இதனால் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த மத்திய அரசு, இந்த பிரச்னை குறித்து மாநில முதல்வர்ளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தது. 

டெல்லியில், உள்நாட்டு பாதுகாப்பு பற்றி விவாதிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 16-ம் தேதி முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் இது மிகவும் முக்கியமான பிரச்னை என்பதால்,இதுகுறித்து தனியாக முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.இதேபோல் மம்தா பானர்ஜியும் கோரிக்கை விடுத்தார். 

அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு,தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி விவாதிக்க மே 5 ம் தேதி தனியாக முதல்வர்கள் மாநாடு கூட்டப்படும் என்று அறிவித்தது. 

அதன்படி, வருகிற மே 5 ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முதல்-மந்திரிகள் மாநாடு நடைபெறுகிறது.இதில் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 4 அல்லது 5 ம் தேதி ஜெயலலிதா டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -