மதுரை

மதுரை ஆதினத்துக்கு நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை கண்டித்து மற்ற ஆதின கர்த்தர்கள் சேர்ந்து நேற்று கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில், இன்னும் பத்து தினங்களுக்குள் நித்தியானந்தா நியமனம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் மதுரை ஆதினத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நித்தியானந்தாவும், மதுரை ஆதினமும் சேர்ந்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். 

அப்போது, நித்தியானந்தா, எங்களிடம் விளக்கம் கேட்க மறுத்து, என் மீது அவதூறு பரப்பிய தருமபுரம் உள்ளிட்ட ஆதினங்கள் மீது பிடதி பீட பக்தர்கள் மான நஷ்ட வழக்கு தொடுப்பார்கள் என்று மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது...

நாங்கள் இருவருமே (நித்தியானந்தா, மதுரை ஆதினம்) ஆதினகர்த்தர்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கத் தயாராக இருந்தோம். அவர்கள் எங்களைச் சந்திக்கவே நேரம் ஒதுக்கவில்லை. எங்களைச் சந்திக்க அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். எங்களிடம் விளக்கம் பெறாமல், தன்னிச்சையாக அவர்கள் கூட்டம் போட்டு, தீர்மானம் நிறைவேற்றி இவ்வாறு பேட்டி அளித்திருப்பது வருந்தத் தக்கது. இதனால், பிடதி பீட பக்தர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் எங்களிடம் பேசியிருக்க வேண்டும்.

இன்னும் பத்து நாட்களுக்குள், அவர்கள் எங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், அவர்கள் போட்ட தீர்மானத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் பிடதி பீட பக்தர்கள் மீது அவதூறு பரப்பியதாக, மான நஷ்ட வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறார்கள்.

மேலும், தருமபுரம் ஆதினம் முன்பு அமர்ந்து பிடதிபீட பக்தர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு ஒரு லட்சம் பேர் கையெழுத்து பெற்று மனு கொடுப்போம். மேலும், ஆதினத்துக்கு யார் வருவது என்பது பற்றி சாதி ரீதியாக கருத்து வெளியிட்டு மத துவேஷத்தை வளர்த்திருக்கிறார்கள். இது தவறு. இது தொடர்பாக மத துவேஷத்தை வெளிப்படுத்தும் சட்ட பிரிவின் கீழ் புகார் அளிக்கப்படும் என்றார் நித்தியானந்தா.

அப்போது மதுரை ஆதினமும் உடன் இருந்தார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -