சென்னை

93 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்,

தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தாவது.


தமிழ்நாடு கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வித் துறையில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அனைத்து மாணவ, மாணவியரும் இடை நிற்றல் இன்றி உயர் கல்வி கற்று, அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில், இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் இரண்டு புதிய  அரசு பொறியியல் கல்லூரிகள்;  ஏழு புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், ஞடிடலவநஉhniஉள; மற்றும் பதினொன்று புதிய பல்கலைக்கழக உறுப்பு இரு பாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று 19.4.2012 அன்று இந்த சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்தேன்.
புதிய கல்லூரிகள் ஏற்படுத்துவதுடன், தற்போதுள்ள கல்லூரிகளில் மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் கல்வி பயிலும் வகையில் நல்லதொரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.
இதன் அடிப்படையில், தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 24 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 93 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், இக் கல்லூரிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.  இதன்படி, ஏற்கெனவே குறிப்பிட்ட அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலிருந்து, மாணவ - மாணவியர் மற்றும்  ஆசிரியர்களுக்கு தேவைப்படும் புதிய மேசைகள் மற்றும் நாற்காலிகள் வழங்குதல்; வகுப்பறைகளில் நவீன கரும்பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைத்தல்; மொழி ஆய்வகங்களுக்கு கணினி மேசைகள் மற்றும் கணினி நாற்காலிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், கல்லூரிகளில் உள்ள துறை சம்பந்தப்பட்ட நூலகங்களுக்கு தேவையான மேசைகள் மற்றும்  நாற்காலிகள் வழங்குதல்; புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரிகள் அமைத்துத் தருதல்; நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்குதல்; மற்றும் நூலகங்கள் கணினிமயம் ஆக்கப்படுதல் போன்ற பணிகளும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.
மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள், தங்கள் பாடங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளவிருக்கும் பரிசோதனைகளுக்காக கல்லூரிகளில் தரம் வாய்ந்த ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்துதல்; அதற்கு தேவையான உபகரணங்களை வழங்குதல்; மேசைகள், பணி மேசைகள் வழங்குதல், தண்ணீர் குழாய்கள் மற்றும் வாயுக் குழாய்கள் அமைத்துத் தருதல்,
இவையன்றி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வசதிகள் ஏற்படுத்தித் தருதல்; மாணவ, மாணவியர் விடுதிகளில் சமையலறை மற்றும் உணவறை கூடங்களை மேம்படுத்துதல்; கழிப்பறை வசதிகள் செய்துக்  கொடுத்தல்; குப்பை அகற்றும் கூடைகள் வைத்தல்; மற்றும் வகுப்பறைகள், நூலகம், ஆசிரியர்களின் ஓய்வறைகள், உணவறை கூடங்கள் ஆகியவற்றில் மின் விளக்கு மற்றும் மின் விசிறி ஏற்படுத்தித் தருதல் மற்றும் மின் உபகரணங்களை வழங்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும்.
அரசுக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை இல்லாத அளவு உயர் ஒதுக்கீடாக 100 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம், அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அனைத்து வசதிகளையும் பெற வழிவகை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், இந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் அறிவுத் திறன் மேம்பட்டு, அவர்கள் அகில இந்திய அளவில் முன்னிலை இடத்தை பெறும் வாய்ப்புகள் ஏற்படும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -