
சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பயிர் மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் இந்தியாவிலேயே ஒரு முன்னோடி திட்டமாகும். பண்ணை அளவிலான இத்திட்டத்தின் மூலம் பயிர் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வேளாண் வணிகம் சார்ந்த அறிவுரைகளையும் விவசாயிகள் எளிதில் பெற இயலும். இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்த விவசாயிகள் எந்த நேரத்திலும் கைபேசி மூலம் பண்ணை இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தலாம். மேலும், இதன் மூலம் விவசாயப் பெருமக்கள் உரங்கள், விதைகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்களையும், வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்களையும் எளிதில் அறிந்து கொள்ள இயலும். பயிர் உற்பத்தி மற்றும் வணிகம் தொடர்பான அனைத்து விளக்கங்களையும் இந்த புதிய மென்பொருட்கள் மூலம் மாநிலத்தின் எந்த கிராமத்திலிருந்தும் விவசாயிகள் தகவல் பெற முடியும்.
தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட இம்முன்னோடி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் பண்ணை உற்பத்தியை பெருக்கி, வருவாய் அதிகரிக்க உறுதுணையாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் , தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறைச் செயலாளர், வேளாண்மை ஆணையர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்த் துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.