பாட்சா, தில் உள்பட ஏராளமான படங்களில் நடத்திருப்பவர் பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவர் விருகம்பாக்கம், ஆற்காடு ரோட்டில் உள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இதேவீட்டில் கல்பாக்கம் புதுப்பட்டனத்தை சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபரும் தங்கி இருந்தார். இவர் சினிமாவில் டான்சராக பணியாற்றினார்.
அல்போன்சாவும், வினோத்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். எனவே இருவரும் ஒரே வீட்டில் குடியிருந்தனர். நேற்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வினோத்குமார் படுக்கை அறைக்கு சென்றார். சில நிமிடங்கள் கழித்து அந்த அறைக்குள் அல்போன்சா சென்றபோது வினோத்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உடனடியாக பக்கத்து வீட்டில் இருந்த டாக்டரை அழைத்தனர். அவர் பரிசோதித்தபோது வினோத்குமார் இறந்து போனது தெரியவந்தது.
இதையடுத்து குடியிருப்பின் காவலாளி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நள்ளிரவில் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அல்போன்சாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அல்போன்சா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், கணவரை பிரிந்து வாழ்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அல்போன்சாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வினோத்குமார் அடிக்கடி வற்புறுத்தி வந்தாராம். ஆனால் திருமணத்துக்கு அல்போன்சா சம்மதிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
வினோத்குமார் தற்கொலை செய்தது குறித்து போலீசாரிடம் அல்போன்சா அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நானும், வினோத்குமாரும் ஒரு வருடமாக காதலித்தோம். தன்னை திருமமணம் செய்து கொள்ளும்படி வினோத்குமார் வற்புறுத்தி வந்தார். நானும் சரி என்றேன். எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்றேன்.
இந்த நிலையில் நேற்று இரவு வினோத்குமாருக்கு அவரது வீட்டில் இருந்து போன் வந்தது. அவருக்கு உறவில் பெண் ஒருவரை பார்த்து இருப்பதாகவும் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் போனில் வற்புறுத்தினர். இதனை என்னிடம் சொல்லி அழுதார்.
நான் தைரியம் சொன்னேன். பிறகு திடீரென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு அல்போன்சா கூறினார்.
இதனால் மனம் உடைந்த அல்போன்சா வீட்டுக்குள் சென்று தூக்க மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கி விழுந்த அவரை வடபழனியில் உள்ள தனியார் மருதுவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது
