சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்சுகள் போராட்டம் வலுக்கிறது

சென்னை, 

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சிங் படித்த மாணவிகள் சுமார் 800 பேர் சம்பள உயர்வு கேட்டு 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் நேற்று முன்தினம் முதல் நர்சுகள் வேலைக்கு செல்லாமல் போராட்டம் நடத்துகின்றனர். முதல் நாள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசார் இவர்களை கைது செய்ய முயன்ற போது மறியலில் ஈடுபட்டதால் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

அதன்படி நர்சுகள் கலைந்து சென்றனர். நேற்று நர்சுகள் வேலைக்கு செல்லாமல் ஹாஸ்டலில் தங்கி இருந்தனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் முயற்சி செய்தது. குடிநீர் இணைப்பையும் துண்டிக்க முயன்றனர். ஆனால் மாதர் சங்கத்தினர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நர்சுகளை ஹாஸ்டலில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக நர்சுகள் வேலைக்கு செல்லாமல் மருத்துவமனை அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் திரண்டு தர்ணா நடத்தினர்.

அப்போது நர்சுகள் கூறும்போது ரூ.5 லட்சம் செலவு செய்து நர்சிங் படிப்பு முடித்து வேலைக்கு வந்துள்ளோம். எங்களுக்கு 6500 முதல் 7 ஆயிரம் வரைதான் சம்பளம் தருகிறார்கள். ஆண்டுக்கு 100 ரூபாய், 150 ரூபாய்தான் சம்பள உயர்வு என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் போராடுகிறோம் என்றனர்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியை தொடர்ந்து மியாட் ஆஸ்பத்திரி, குளோபல் ஆஸ்பத்திரி, எம்.எம்.எம். ஆஸ்பத்திரி உள்பட சென்னையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுகளும் வேலைக்கு செல்லாமல் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சேவை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சீனியர் நர்சுகள் ஒரு சிலர் மட்டும் வேலைக்கு சென்றுள்ளனர். நர்சுகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளதால் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை சந்திக்க தயார் என்று அறிவித்துள்ளனர்.

இதனால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.