தமிழக அரசின் செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கை காரணமாக,  மாலத்தீவு கரையோர காவற்படையினரால் கைது செய்யப்பட்ட 11  மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்ப உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தினைச் சேர்ந்த 11  மீனவர்கள், அம்மாவட்டத்திலுள்ள இரவிப்புத்தன்துறை மீனவ கிராமத்திலிருந்து மீன்பிடி விசைப்படகில் 23.2.2012  அன்று அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். படகில் ஏற்பட்ட சிறு பழுதினால், படகு கடல் நீரோட்டம் காரணமாக மாலத்தீவு கடற்பகுதிக்கு திசை மாறிச் சென்றது. மாலத்தீவு கடற்பகுதியில் இப்படகு காணப்பட்டதால்,  மாலத்தீவு கரையோரக் காவற்படையினர்,  மேற்கண்ட படகினையும்,   அதிலிருந்த 11 மீனவர்களையும் கைது செய்ததாக தகவல்கள் பெறப்பட்டன.

     மேற்கண்ட தகவல் கிடைக்கப்பெற்றவுடன்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில், தமிழக அரசு வெளியுறவுத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்திற்கென மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 11 மீனவர்களையும், அவர்களது படகினையும் உடனடியாக விடுவித்திட ஆவன செய்திட,  மாலத்தீவின் இந்திய துhதரக அதிகாரியைக் கேட்டுக் கொள்ள விரைவு நடவடிக்கை எடுத்தது. தமிழக அரசு மேற்கண்ட இம்முயற்சியின் காரணமாக,  மீனவர்கள்  மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல், அவர்கள் மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படாமல் வழியில் உள்ள குல்த்துப்யூஷி என்னும் இடத்தில் இன்று (2.3.2012) விடுவிக்கப்படுகின்றனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இரண்டு,  மூன்று நாட்களில் தமிழகம் திரும்புவார்கள்.



- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -