மத்திய அரசு சினிமா துறைக்கு 10.3 சதவீத சேவை வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இம்முடிவிற்கு இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாட்டில், சினிமாவிற்கு வழங்கப்படும் டிக்கெட் கட்டணத்தில், நகர் பகுதிகளில் 30 சதவீதமும் மற்ற பகுதிகளில் 20 சதவீதமும் கேளிக்கை வரியாக அளிக்கப்படுகிறது. சேவை வரியாக மத்திய அரசு 10.3 சதவீதத்தை விதித்தால் தயாரிப்பு செலவு அதிகமாகும். இதனால் சினிமா நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

இதன் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் திரையுலகினர், தங்கள் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், வரும் 23ந் தேதி அகில இந்தியா திரைப்பட சம்மேளனம் சார்பில், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அகில இந்தியா திரைப்பட சம்மேளனத்தின் துணை தலைவர் எல். சுரேஷ் கூறும் போது, 'மத்திய அரசு கொண்டு வர உள்ள சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் 23ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறோம். அன்று இந்தியா முழுவது உள்ள திரையரங்குகள் இயங்காது. அது மட்டுமின்றி அன்று முழுவதும் சினிமா தொடர்பான எவ்வித பணிகளும் நடைபெறாது' என்றார்.             

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -