இயற்கை சீற்றங்களால் நாட்டில் புயல், வரட்சி, பஞ்சம், பட்டினி ஏற்படும்போது பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும் போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்ச வேலை வாய்பையும், பொருளாதாரத்தையும் ஏற்படுத்தி கொடுப்பதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டம்.


இதுபின்னர் 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கிராமப்புர மக்களுக்கு வருடத்தில் நூறு நாட்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து வருகிறது.

இத்திட்டங்கள் மூலம் வாய்க்கால், ஏரிகள், குளங்கள் தூர் வாருதல், ஆற்றங்கரைகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்தல், கிராமத்தில் புதிய மண்சாலை அமைத்தல், சாலை செப்பனிடுதல் போன்ற பணிகள் நடைபெற்றுவருகின்றன.

18 வயது நிறைவுற்ற, உடல் ஊனமில்லாத ஆண், பெண் அனைவருக்கும் வேலை வாய்ப்பை கொடுக்கும் இத்திட்டம் ஊராட்சி மன்ற ஆணையாளரால் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். இத்திட்டத்திற்கான தொகையை மத்திய அரசு நேரடியாக ஊராட்சி மன்றத்திற்கு கொடுத்துவிடுகிறது. இப்போதைய மதிப்பின்படி வேலை செய்யும் நபருக்கு தினமும், நூறு ரூபாய் அளவில் கூலி கொடுக்கப்படுகிறது. 

சாதாரணமாக பத்து ஆட்கள் வேலை செய்தால் ஒரு நாளில் முடிக்கப்பட வேண்டிய வேலையை, இத்திட்டத்தில் நூறு நபர்கள் செய்து முடிக்கிறார்கள். 

அதாவது காலை எட்டு மணிக்கு வேலையை தொடங்கும் ஆட்கள், சுமார் ஒரு மணி நேரம் மட்டும் வேலை செய்துவிட்ட மரத்தடியில் படத்து தூங்குகிறார்கள். மதியம் ஒரு மணிக்கு எழுந்து வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார்கள். 

இத்திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் ஒரே ஏரியில் பலதடவை தூர்வாரிவிட்டார்கள். ஒரே சாலையை பலதடவை போட்டுவிட்டார்கள்.



மண் வாரிக்கொட்டப்படுவதாக சொல்லிவிட்டு மண்ணுக்கு மேலே உள்ள புல், பூண்டுகளை மட்டும் சுரண்டிவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்படி செய்யாத வேலைக்கு செலவு செய்யும் போது அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நல்ல மாமூல் கிடைப்பதால் அனைத்து தரப்பினரின் அமோக ஆதரவுடன் நடந்து கொண்டிருக்கும் இத்திட்டத்தை பொதுமக்கள் பலரும் எதிர்கிறார்கள்.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன்?

சேலத்தில் நடந்த கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் நல்லசாமி இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசினார்.

நாட்டில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக இருக்கும் காலத்தில், தேசிய ஊராக வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது தேவையில்லாதது. 

இத்திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுவது விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்டுள்ள மக்கள்தான். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் முதல், மானாவாரி விவசாயம் செய்யும் கொங்குநாட்டு விவசாயிகள் வரை அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். 

இப்போது நாடு முழுவதும் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை ஏற்பட்டள்ளது. காரணம் இந்த 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம்.

ஏழை எளிய மக்களின் ஓட்டுகளை சுரண்டும் நோக்கத்தில் இத்திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதனால், நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சியும் இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பற்றி விமர்சிப்பதில்லை.

விவசாய வேலைக்கு ஆள் இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் விவசாய நிலங்கள் குறையும், விவசாய உற்பத்தியும் குறையும், இதனால் விலைவாசி அதிகமாகும். பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னரே அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றார் நல்லசாமி.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -