உயர்ந்த மனிதன் சிவாஜி

1.10.1928 ஆம் ஆண்டு பெற்றோர்கள் தந்தை சின்னையா மன்றாயருக்கும் அன்னை ராஜாமணி அம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் வி.சி. கணேசன் (எ) நடிகர் திலகம் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன். இவர் பிறந்த சமயம் தந்தை சின்னையா மன்றாயர் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் சிறை சென்றிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்பொழுது சிவாஜி அவாகள் நாலரை வயது சிறுவனாய் வளர்ந்திருந்தார்.


இவருக்கு ஏழு வயது நடக்கும்பொழுது தன் தந்தையுடன் கட்டபொம்மன் நாடகம் பாணக்கச் சென்றார். நாடகம் நடத்துபவர்கள் வெள்ளைக்கார பட்டாளத்திற்கு ஆள் போதவில்லையென்று கணேசனை மேடையேற்றினர். அதுவே இவரின் முதல் நாடகம். ஆர்வமாய் நடித்தார். ஆனால் தந்தையாருக்கோ தான் எதிரியாக நினைக்கும் வெள்ளைக்காரர் படையில் மகன் நடித்து விட்டானே என்று கோபம். வீட்டிற்கு வந்ததும் என் எதிரியின் படையில் சேர்ந்து எப்படி கூத்தாடலாம் என்று அடித்தார். அன்றுதான் நாமும் ஏன் பெரிய நடிகனாக ஆகக் கூடாது என்ற வைராக்கியம் கணேசனின் மனதில் தோன்றியது. அந்த நேரத்தில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியான மதுரை ஸ்ரீபாலகான சபாவினர் திருச்சியில் முகாமிட்டிருக்க - தனது நடன, பாட்டு ஆர்வத்தை அவர்களிடம் வெளிப்படுத்தி தான் அனாதை என்று கூறி, அவர்களிடம் இரக்கத்தை ஏற்படுத்தி, நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.

அங்கு காலை ஏழு மணிக்கு எழுப்பி விடுவார்கள். எழுந்தவுடன் குளித்து விட்டு சாமி கும்பிட வேண்டும். அதன்பிறகு முதலில் பாட்டு இரண்டாவது டான்ஸ். அடுத்தது அன்று நடக்க வேண்டிய நாடகத்திற்கு வேண்டிய உரையாடல்களுக்கு ஒத்திகை நடத்த வேண்டும். இந்த முறைப்படியான பயிற்சி இவரை பெண் வேஷம் போடுவதிலிருந்து ஆண் வேஷம் அணிந்து நடிக்கும் 'ராஜபார்ட் நடிகர்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.

இந்த காலகட்டத்தில் இவரின் மூத்த இரு அண்ணன்கள் அடுத்தடுத்து இறந்தனர்.இச செய்தி தெரிந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் கணேசன் இருந்தார்.






வி.சி.கணேசன் அவர்களுடன் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன் போன்ற எல்லா ரோல்களிலும் நன்றாக நடிக்கக் கூடிய நடிகர்கள் இருந்தனர்.

நாடகக் கம்பெனி பரமக் குடியில் முகாமிட்டிருந்தபொழுது கர்ம வீரர் காமராஜரைச் சந்திக்கும் வாய்ப்பு கணேசன் அவர்களுக்கு கிட்டியது.

இவரின் நாடகக் குழு குமாரபாளையம் என்ற ஊரில் முகாமிட்டிருந்த பொழுது, மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது... கணேசன் உட்பட நாடகத்தில் நடிக்கும் பிள்ளைகளெல்லாம் - பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஆற்றில் வெள்ளம் வர - தண்ணீரிலிருந்து வெளியே ஓடி வர முடியாமல் கணேசன் உட்பட அனைவரும் தவித்துப் போனார்கள் அந்த ஊர் பெரியவர்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் காப்பாற்றினார்கள்.

இவர்களின் நாடகக்குழு கோயமுத்தூரில் முகாமிட்டிருந்த பொழுது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் படம் எடுப்பதற்காக அங்கு ஒரு ஸ்டூடியோவில் தங்கியிருந்தார். அவர் லோகிதாசன் வேஷத்திற்கு ஒரு நடிகரைத் தேட, நாடகக் குழுவினர் கணேசனையும் காகா ராதாகிருஷ்ணனையும் அவரிடம் கொண்டு சென்று காட்டினர் அவர் அந்த வேஷத்திற்கு பொருத்தமானவர் என்று காகா ராதா கிருஷ்ணனை தேர்வு செய்தார்.

வீட்டிற்கு தெரியாமல் ஓடி வந்து நடிப்பின் ஆசையால் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தொடர்ந்து நடித்து பாராட்டுக்களைப் பெற்ற கணேசனுக்கு வீட்டின் நினைவு அதிகமாக வரத் தொடங்கியது. அதனால் "தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கணேசன் நாடகக் கம்பெனிகாரர்களிடம் தொந்தரவு செய்தார். அதனால் அவர்கள் கணேசனை தங்கவேலுடன் சேர்த்து ஊருக்கு அனுப்பினார்கள். இருவரும் திருச்சி வந்து சேர்ந்தார்கள். திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்த கணேசன் முதலில் பாணத்தது அவரது தங்கை பத்மாவதியையும், தம்பி சண்முகத்தையும்... இரண்டு பேரும் பெரியவர்களாக வளர்ந்திருந்தார்கள். அந்த வருடம் அப்பா, அம்மா, அண்ணன் தங்கவேலு தம்பி சண்முகம் தங்கை பத்மாவதியுடன் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடினார்.

பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியிலிருந்து விலகி எம்.ஆர். ராதா 'சரசுவதி கான சபா' என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பிக்க - எம்.ஆர். ராதா அழைப்பின் பேரில் வி.சி. கணேசன் அந்த கம்பெனியில் சேர்ந்தார். கணேசனை சென்னைக்கு அழைத்து வந்த எம்.ஆர். ராதா அவரை சென்னையைச் சுற்றி பார்க்க வைத்தார்.

சரசுவதி கான சபாவினர் 'லட்சுமிகாந்தன்', 'விமலா'. 'விதவையின் கண்ணீர்' போன்ற புதிய நாடகங்களை நடத்தினார்கள். ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாரின் தியேட்டரில்தான் இந்த நாடகங்கள் நடந்தன. அப்பொழுதுதான் தந்தை பெரியாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கணேசனுக்குக் கிடைத்தது.

காலையில் எழுந்ததும் குளித்து விட்டு பெரியாரின் வீட்டிற்கு சென்று விடுவார் கணேசன். அங்குதான் பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத் போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களின் சினேகிதமும் பெரியாரின் மீது ஒரு ஈடுபாடும் கணேசனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஈரோட்டில் ஆரம்பத்தில் - வரவேற்பு பெற்ற எம்.ஆர். ராதா நாடகங்கள் பின்னர் வசூலில் குறைய ஆரம்பிக்க பார்ட்னாகளுக்குள் பிரச்னை ஏற்பட்டு நாடகம் நிறுத்தப்பட்டது. எம்.ஆர். ராதா மட்டும் கம்பெனியை விட்டு விலகி ஊருக்குச் சென்று விட்டார்.

நாடகம் தொடாந்து நடக்காததால் கணேசனுக்கும் அவருடன் தொடர்ந்து நடிக்கும் நாடக நடிகர்களுக்கும் சாப்பாட்டு பிரச்சனை ஏற்பட்டது. ஊரைச் சுற்றி உள்ள வயல்காட்டு தோட்டப் பகுதியில் விளைந்திருந்த சேனைக் கிழங்கை தோண்டி எடுத்து சாப்பிட்டு சமாளித்தவர்கள்- தாங்களே ஒரு நாடகம் நடத்தி அதில் மக்கள் கொடுத்த பணத்தை வைத்து திருச்சி போய் சேர்ந்தார்கள்.

அதன் பிறகு நாடகமே நடிக்காமல் வீட்டில் சும்மா இருந்த கணேசன் அவர்கள் திருச்சியில் 'ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்' என்ற கம்பெனியில் ஏழு ரூபாய் சம்பளத்தில் மெக்கானிக்காக வேலையில் சேர்ந்தார்.அவர் தன் அம்மாவிடம் கொடுத்த அந்த சம்பள பணம் குடும்பத்திற்கு அன்று பேருதவியாய் இருந்தது.

கணேசன் நாடகத்தில் நடிக்கவில்லையே தவிர கவனம் அதிலேயே இருந்தது. நண்பன் ஒருவன் அழைக்க அம்மாவின் அனுமதியுடன் மீண்டும் சரஸ்வதி கான சபாவில் போய் சேர்ந்தார்.

சரஸ்வதி கான சபா நாடக வசூல் குறையத் தொடங்க என். எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோர் முன் வந்து நாடகக் கம்பெனியை வாங்கி 'என்.எஸ்.கே. நாடகக் கம்பெனி' என்று பெயர் வைத்து 'ரத்னாவளி', 'மனோகரா' போன்ற நாடகங்களை நடத்தி வந்தனர். லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே சிறை செல்ல - அதன் பிறகு என்.எஸ்.கே. நாடகக் கம்பெனியை யார் நடத்துவது என்ற பிரச்னை எழுந்த போது கம்பெனியில் இருந்த எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி ஆகிய இரண்டு பெரிய நடிகாகளில் எஸ்.வி. சகஸ்ரநாமத்திடம் கம்பெனி பொறுப்பை டி.ஏ. மதுரம் ஒப்படைத்தார்.

இதனால் கே.ஆர். ராமசாமி ஒரு தனி நாடகக் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணேசன் - மற்றும் உடன் நடிக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார். அது திராவிடர் கழகம் மிக மும்முரமாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்த காலம்.

1946 ஆம் ஆண்டு சென்னையில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடந்தது... அதில் பேரறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. அதில் அண்ணா காசுபட்டராகவும். கணேசன் சிவாஜியாகவும் இணைந்து நடித்தனர். அந்த நாடகத்தைப் பார்த்த ஈ.வெ.ரா. பெரியார் "இந்த நாடகத்தில் யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜி வேஷத்தில் நடித்திருந்தானே அவன் யார்?" என்று கேட்டார். கணேசனை அவரெதிரில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

'நீதான் கணேசனா? இன்று முதல் நீ சிவாஜி' என்று ஈ.வெ.ரா பெரியார் பாராட்டி 'சிவாஜி' என்ற பட்டத்தை கணேசனுக்கு வழங்கினார். அன்று முதல் வெறும் கணேசன் 'சிவாஜி கணேசன்' ஆனார்.

2.கே.ஆர். ராமசாமி தஞ்சாவூரில் தன்னுடைய நாடகக் கம்பெனியை ஆரம்பித்தார். தஞ்சாவூரில் நாடகங்கள் நடந்தன. கே.ஆர். ராமசாமி 'மனோகரா' நாடகத்தை நடித்துக் கொண்டே நடத்தினார். அதில் பத்மாவதியாக கணேசன் நடித்தார். அண்ணா எழுதிய 'ஓர் இரவு' நாடகத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார் கணேசன் நடிக்கவில்லை. அண்ணாவுடனே இருந்து கொண்டார். அண்ணா அரசியல் கூட்டங்களுக்கு செல்லும்பொழுது கணேசனும் உடன் செல்வார். இதில் பல்வேறு அனுபவங்கள் இவருக்கு கிட்டியது.

'சக்தி நாடக சபா' என்ற நாடகக் கம்பெனியை சக்தி கிருஷ்ணசாமி என்பவர் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தார். அந்த நாடகக் கம்பெனியில் பெரிய நடிகர்களாக எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் இருந்தனர். இவர்கள் இருவரும் ஜுபிடரின் படத்திற்காக சினிமாக் கம்பெனிக்கு சென்று விட்டார்கள். எனவே சக்தி நாடக சபாவிற்காக நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகர்கள் தேவைப்பட்டார்கள்.

அதனால் சக்தி கிருஷ்ணசாமி கணேசனின் நண்பர்களை அண்ணாவிடம் அனுப்பி கணேசனை அழைத்து வரச் சொன்னார். அண்ணாவும் அவரை அனுப்பி வைக்க மீண்டும் கணேசன் மேடையேறினார்.

பெங்களூர் காந்தி நகர் குப்பி தியேட்டரில் சக்தி நாடக சபாவின் நாடகம் நடந்துக் கொண்டிருந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம் நாட்டிற்கு சுதந்திரம் வந்தது. கணேசனின் குடும்பம் இந்தியச் சுதந்திரத்திற்காக பாடுபட்ட குடும்பம் என்பதால் அதைக் கொண்டாடும் வகையில் கதர்க் கொடியைக் கையிலேந்தி 'கதர்க் கப்பல் தோன்றுதே' என்று ஆடிப்பாடி நடித்தார் கணேசன்.















பெங்களூரில் அடிக்கடி ஜாதிக் கலவரம் நடந்துக் கொண்டிருந்ததால் சக்தி நாடக சபா வேலூருக்கு வந்தது. அங்குதான் கணேசன் 'சிவாஜி கணேசனாக' மாறி நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் வெற்றி நாயகனாக வலம் வரக் காரணமாயிருந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் அவர்கள் கணேசனின் நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் 'நூர்ஜஹான்' நாடகத்தில் மிகவும் அழகான பெண் தோற்றத்தில் சாஸ்திர பூர்வமான நடனம், கதகளி ஆகியவற்றை ஆடிக் காட்டுவார் கணேசன்.

அதன்பிறகு வேலூரில் முகாமை கலைத்துவிட்டு ஆந்திராவில் உள்ள சித்தூருக்குச் சென்றார்கள். அந்த காலத்தில் மொழிப் பிரச்னையில்லை. நாடகம் என்றால் நாடகம்தான். அங்கு சித்தூர் நாகையா என்ற பெரிய நடிகர் கணேசனை வந்து சந்தித்தார்.

வேலூர், குடியாத்தம் போன்ற இடங்களில் பல நாடகங்களை நடத்தியவர்கள் பின் தேனிக்கு பக்கத்தில் உள்ள பெரிய குளம் சென்றார்கள். இந்த சமயத்தில் சக்தி கிருஷ்ணசாமிக்கு சினிமாவில் கதை, வசனம் எழுதும் வாய்ப்பு கிடைக்க அவர் சென்று விட்டார். அவர் சென்று விட மீண்டும் கஷ்டம் வந்தது.

இந்தச் சூழ்நிலையில் கணேசனுக்கு ஒரு புதிய வாய்ப்பு வந்தது. அப்பொழுது 'பராசக்தி' என்றொரு நாடகம் பெரும் புகழோடு நடந்துக் கொண்டிருந்தது. ஏ.வி.எம் ஸ்டூடியோவின் படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் 'பராசக்தி' நாடகத்தை ஏ.வி.எம். நிறுவனத்துடன் கலந்து பேசி பாணட்னர்ஷிப்பில் படமாக எடுக்க முடிவு செய்தனர். இந்தப் படத்தில் முக்கிய வேஷத்தில் நடிப்பதற்கு புதுமுக நடிகர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள். அப்பொழுதுதான் பி.ஏ. பெருமாள் மனதில் நாடகத்தில் நடித்தக் கொண்டிருந்த கணேசனின் ஞாபகம் வந்தது. கணேசன் நடிக்கின்ற நாடகங்களை வேலூரில் அவர் அடிக்கடி பார்த்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வந்த கணேசனுக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். இந்த சமயத்தில் ஏ.எஸ். சாமிக்குப் பதிலாக கிருஷ்ணன் பஞ்சுவை படத்தின் இயக்குநராக நியமித்திருந்தார்கள். அதேபோல் திருவாரூர் தங்கராசுக்குப் பதிலாக 'பராசக்தி' படத்திற்கு கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதும்படி ஆகியது. கணேசனை மேக்கப் டெஸ்ட் முடிந்ததும் 'சக்சஸ்' என்ற ஆங்கில வார்த்தையைச் சொல்ல சொன்னார்கள். கணேசனும் 'சக்சஸ்' என்று சொன்னார்.

'சக்சஸ்' என்று கூறியது 'சத்தத்' போல் கேட்பதாகவும், மீன் மாதிரி வாயத் திறக்கிறான் என்றும் சவுண்ட் என்ஜினியர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர்.

ஆயிரக்கணக்கான கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு உருவாக்கித் தந்த ஏ.வி.எம் செட்டியாரோ 'ஏம்பா இந்தப் புது பையனப் போட்டு விஷப் பரீட்சை செய்றீங்க. கே.ஆர். ராமசாமி அல்லது டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்களை நடிக்கச் சொல்லி படத்தை முடியுங்க' என்று சொல்லியிருக்கிறார். மற்றவர்களும் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இவ்வளவு தூரம் கணேசனை பலர் அவமானம் செய்தும் 'கணேசனை வைத்துப் படத்தை எடுக்காதீர்கள்' என்று பி.ஏ. பெருமாளிடம் பலர் கூறியும் அதையெல்லாம் மீறி "என்ன ஆனாலும் சரி... கணேசனை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்" என்று ஒற்றைக் காலில் நின்றார் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் அவரது மன உறுதியும் கணேசன் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகர் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைப்பதற்கு காரணமாக இருந்தது.

1952 ஆம் ஆண்டு பராசக்தி வெளிவந்த அதே ஆண்டில் தனது மகன் சிவாஜி கணேசனுக்கு கமலம்மாவைப் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார் அன்னை ராஜாமணி அம்மாள். சீர்திருத்தக் கல்யாணமாக மே மாதம் 1ம் தேதி சுவாமி மாலையில் நடந்தது. ரத்தினம் பிள்ளை திருக்குறள் படிக்க - கவிஞர் கண்ணதாசன் மணமாலையை எடுத்துக் கொடுக்க- தனது அக்கா மகள் கமலாவின் கழுத்தில் அணிவித்தார் சிவாஜி கணேசன். இந்தக் கல்யாணத்திற்கு பி.ஏ. பெருமாள், எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, அரங்கண்ணல், கவிஞர் கண்ணதாசன், டி.ஏ. மதுரம், எஸ்.வி சகஸ்ரநாமம், டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் வந்து கலந்துக் கொண்டனர்.

திருமணம் முடிந்து முதலில் கோடம்பாக்கத்தில் குடியேறிய சிவாஜி கணேசன் பின்னர் ராயப்பேட்டை பெஸண்ட் ரோட்டில் இப்போது சிவாஜி பிலிம்ஸ் ஆபீஸ் இருக்கும் இடத்தில் குடியேறினார். இதற்கு முன்பே சிவாஜிகணேசனின் தகப்பனார் சௌத் போக் ரோட்டில் உள்ள ஒரு பெரிய வீட்டை வாங்கி விட்டதால் அந்த வீட்டிற்கு 'அன்னை இல்லம்' என்று பெயரிட்டு அனைவரும் குடியேறினார்கள். அங்கு வந்தபிறகு சிவாஜியின் கலையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது அந்த ரோட்டுக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயரிட்டிருக்கிறது தமிழக அரசு.

சிவாஜி கணேசனுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும்.இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். மூத்த மகள் பெயர் சாந்தி. மூத்த மகன் பெயர் தளபதி ராம்குமார். இளைய மகன் பிரபு, மகள் தேன்மொழி. சிவாஜி கணேசனின் குடும்பம் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். ராஜாமணி அம்மாள் உயிருடன் இருந்தபோது நூறுபேர் இருந்தார்கள். இப்பொழுது அறுபது சொச்சம் பேர்தான். அண்ணன் தங்கவேலுவை அவரது குழந்தைகள் பெரியப்பா என்றுதான் அழைப்பார்கள். தம்பி சண்முகத்தின் எல்லாக் குழந்தைகளும் அவரை அங்கிள் என்றுதான் அழைப்பார்கள். வீட்டில் உள்ள ஒரே அப்பா. சிவாஜி கணேசன் மட்டும் தான்.

3.'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' என்பார்கள். அது உண்மை. சிவாஜி கணேசனின் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். அந்தக் குடும்பத்தில் கமலம்மாள்தான் முக்கிய பொறுப்பு வகித்தார். அனைவரையும் ஒற்றுமையாக. அன்பு காட்டி. பாசம் காட்டி வளர்த்தது எல்லாமே கமலம்மாள்தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'பராசக்தி' படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி வில்லனாக. . காமெடியனாக. குணசித்திர நடிகராக, புராண வேடம். சரித்திர வேடம் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நவரசத்தையும் வெளிப்படுத்தி நடித்து சாதனைகளைப் புரிந்தார். அவருடைய சாதனைக்கு இந்திய அளவில் எந்த நடிகரும் ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம்.

முன்பெல்லாம் திரைப்படங்களில் பெரிய பெரிய வசனங்களாக இருக்கும். அது வசனம் பேசும் காலம். நாடகக் கம்பெனியிலிருந்து சினிமா கம்பெனிக்கு வந்தவர்களில் சிவாஜி கணேசன் மட்டும்தான் நல்ல தமிழில் வசனம் பேசக் கூடியவராக இருந்தார். அதனால் அவருக்கென்று தனி வசனங்களை சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள். 'மனோகரா', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'ராஜாராணி', 'அன்னையின் ஆணை',' அன்பு', 'இரத்தத் திலகம்', 'கர்ணன்', 'திருவிளையாடல்' போன்ற படங்களின் வசனங்கள் சிறப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் நடிக்க வருபவர்களிடம் "உங்களுக்குப் பிடித்த படத்திலிருந்து வசனங்களைப் பேசிக் காட்டுங்கள்" என்று கூறினால் அவர்கள் தயங்காமல் பேசுகின்ற வசனங்கள் மேற்கண்ட படங்களின் வசனங்களைத்தான். குறிப்பாக பராசக்தி படத்தின் நீதி மன்ற காட்சி. இந்த முறையில்தான் பலபேர் திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம் பெற்றிருக்கின்றனர்.

சிவாஜி கணேசனுடன் பாலையா, லலிதா, பத்மினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 1954 ஆம் ஆண்டு வெளிவந்த 'தூக்கு தூக்கி' திரைப்படத்தில்தான் டி.எம்.சௌந்தர்ராஜன் முதன் முதலில் சிவாஜி கணேசனுக்காகப் பின்னணிப் பாடினார். சிவாஜி கணேசனின் குரலைப் போலவே டி.எம். சௌந்தர்ராஜன் குரலை மாற்றிப் பாடியிருந்ததால் பட்டி தொட்டியெல்லாம் இந்தப் படத்தின் பாடல்கள் "இரண்டு ஹீரோக்களாக" படத்தின் பாடல்களும், சிவாஜி கணேசனும் இணைந்திருந்தனர்.


1948-49 திராவிடக் கழக இயக்கத்திலிருந்து அண்ணா விலகி தி.மு.க.வை ஆரம்பித்தார். ஒரு சிலர் பெரியாரிடமிருந்து பிரிந்து தி.மு.க.வில் சேர்ந்தனர். அப்போது சிவாஜி கணேசன் எந்தக் கட்சியிலும் சேராமல் அண்ணா, பெரியார் ஆகியோரின் கொள்கைகளை மட்டும் ஆதரிப்பவராக இருந்தார்.

அப்பொழுது ஒரு புயல் நாட்டிற்குள் வந்தது. அது பல இடங்களில் மக்களின் வாழ்க்கையை சீரழித்தது. இந்தச் சூழ்நிலையில் 'புயல் நிவாரணத்திற்கு பணம் வசூல் செய்து தாருங்கள்' என்று அறிஞர் அண்ணா அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

சிவாஜி கணேசன் விருதுநகரில் உள்ள தெருவில் துண்டை விரித்து பராசக்தி படத்தின் வசனம் பேசி பணம் வசூல் செய்து கட்சிக்கு கொடுத்து விட்டு சேலத்துக்கு படப்பிடிப்பிற்காக சென்று விட்டார்.

அண்ணா அதிகமாக புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார். அந்த பாராட்டு விழாவிற்கு அண்ணா நிச்சயம் தன்னை அழைத்து கௌரவிப்பார் என்று சிவாஜிகணேசன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, நடந்த விழாவிற்கு அவரை அழைக்காதது மட்டுமன்றி அதிகம் வசூல் செய்து தந்தவர் எம்.ஜி.ஆர் என்று அவரை அழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் கழகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த சிவாஜி கணேசனை நீக்கி விட்டு எம்.ஜி.ஆரை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள். சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்படித்தான் அரசியல் ரீதியான இடமாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் காங்கிரஸ்காரராக இருந்த எம்.ஜி.ஆர் தி.மு.க. காரராகவும், தி.மு.க காரராக இருந்த சிவாஜிகணேசன் காங்கிரஸ்காரராகவும் மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காங்கிரஸில் தேசியம் கலந்த அரசியல் இருந்தது. அதற்குக் காமராஜர் தலைமை வகித்தார். அவரது தலைமையை ஏற்றுக்கொண்டு சிவாஜிகணேசன் காங்கிரஸ்காரராக மாறினார்.  காமராஜர் சாகும்வரை அவரது தலைமையின் கீழ் விசுவாசமான தொண்டனாய் பணியாற்றினார்.

சிவாஜி கணேசன் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு 'சிவாஜி நாடக மன்றம்' என்ற பெயரில் நாடகக் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். அதை தனது தம்பி சண்முகத்திடம் ஒப்படைத்தார். நாடகத்திலும் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்பில்லாமல் இருந்த பல நடிகர் நடிகையர்களை தனது நாடகங்களில் நடிக்க வைத்து அவர்களது வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்தார்.

சிவாஜி நாடக மன்றத்தின் பல நாடகங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் அண்டை மாநிலங்களிலும் கூட நடந்தன. அவற்றில் மிக முக்கியமான நாடகம் "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகமாகும். இந்த நாடகத்தை படமாக்குவதற்கு டைரக்டர் பி.ஆர். பந்துலு முன் வந்தார். சக்தி கிருஷ்ணசாமி படத்திற்கு வசனம் எழுதச் சம்மதித்தார். கட்டபொம்மனாக சிவாஜி கணேசன் நடித்தார். படம் 100வது நாளையும் தாண்டி ஓடி வெள்ளிவிழாவைத் தொட்டது. ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசை சிவாஜி கணேசனுக்குக் கொடுத்தார்கள். சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் கட்டபொம்மன் படம் பெற்றது.

"வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தை ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விருதுக்காக அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்தது. விழா நடந்த எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு சிவாஜி அவர்கள் சென்றார்கள். அவருடன் பி.ஆர். பந்துலு, பத்மினி ஆகியோரும் சென்று கலந்துக் கொண்டனர். சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த நடன கலைஞர், சிறந்த கதை என்று பல விருதுகள் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக மேடைக்கு சிவாஜி கணேசன் சென்றபோது எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். இது சிவாஜிகணேசனுக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல- இந்தியாவே பெருமைப்படும் அளவிற்குக் கிடைத்த விருதாகும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது நண்பரும் அமெரிக்க நாட்டுத் தூதுவருமாக இருந்த ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்கக் குழந்தைகள் விளையாடுவதற்குப் பரிசாக ஒரு யானைக் குட்டியை வழங்கினார். இவரைப் பற்றி விசாரித்து அறிந்து - அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜான் கென்னடியின் மிகமிக முக்கிய விருந்தாளியாக கலாச்சாரப் பரிமாற்றத்தின் கீழ் அமெரிக்காவிற்கு சிவாஜி கணேசனை அழைத்தார்கள்.

சிவாஜிகணேசன் பாரிசிலிருந்து நேராக அமெரிக்கா சென்றார். ஹாலிவுட் நடிகர்கள் எலிசபெத் டெய்லர், ரிச்சர்ட் பட்டன், மார்லன் பிராண்டோ , மர்லின் மன்றோ. பாப்ஹோப், சார்ல்டன் ஹெஸ்டன், ஹாலிவுட் ஹீரோக்கள் ஜிம் கார்னர், ஜேக் லெம்மன் போன்றவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பும், சிவாஜி கணேசனுக்குப் பெரிய மரியாதை செய்யவும் ஏற்பாடாகியிருந்தது.


4.மூன்று கார்கள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சிவாஜிகணேசனுக்காக நியமிக்கப்பட்ட செகரட்டரியும் இன்னொரு காரிலிருந்து சிட்டி மேயரும் மூன்றாவது காரிலிருந்து முக்கிய பிரமுகர்களும் வந்து இறங்கினார்கள். சிவாஜிகணேசன் அவர்கள் கையில் பூச்செண்டைக் கொடுத்து வரவேற்றார்கள். அரையடி நீளமுள்ள ஒரு பெரிய தங்க சாவியை மேயர் கொடுத்து-' இன்று காலை வரைதான் நான் மேயர். இப்போதிலிருந்து நாளை காலை வரை நீங்கள்தான் நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயர்' என்றார்.

இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க நாட்டிலுள்ள நயாகராவில் சிட்டி மேயராக இருந்தது இரண்டே இரண்டு இந்தியர்கள்தான். ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேருஜீ, மற்றொருவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்.

ஒரு முறை பெருந்தலைவர் காமராஜரும். ராஜாராம் நாயுடுவும் கொட்டும் மழையில் சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்காக அவரது வீட்டிற்கு வந்தார்கள். காமராஜர் சிவாஜி கணேசனுக்கு இரண்டு ஆள் உயரத்திற்கு மாலை வாங்கி வந்து அணிவித்தார். 'நன்றாக இரு' என்று மனதார வாழ்த்திவிட்டுப் போனார். அதன் பிறகு 'பாட்டும் பரதமும்' படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றார் சிவாஜிகணேசன். திரைப் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தளபதி ராம்குமார் வந்தார். அவருடன் சிவாஜி கணேசனின் நண்பரான அப்பன்ராஜ் என்பவரும் வந்திருந்தார். சிவாஜி கணேசனை வெளியே அழைத்துச் சென்று காமராஜர் இறந்து விட்டார் என்ற செய்தியைத் தெரிவித்தனர்.

தன்னை நான்கு முறை' நன்றாக இரு' என்று வாழ்த்தியவர் இறந்து போன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார் சிவாஜிகணேசன்.

அதன்பிறகு காந்தி மண்டபத்தில் வைத்து காமரஜருக்கு ஈமக் கடன்கள் செய்தார்கள். கலைஞர் மு. கருணாநிதிதான் அவர்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தார். அதற்காக முன்னின்று எல்லா வேலைகளையும் தொண்டர்களை வைத்து செய்து முடித்தார் சிவாஜி கணேசன்.

காமராஜர் மறைவுக்குப் பிறகு அனைவரும் இந்திராகாந்தி அம்மையார் கட்சியில் போய்ச் சேர்ந்தார்கள். சிவாஜி கணேசன் மட்டும் சேரவில்லை. காமராஜர் விட்டுச் சென்ற பணிகள் என்னென்ன இருக்கின்றதோ அவைகளை சொல்லுங்கள். நான் பிரதமராக இருக்கின்றேன். எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறேன் என்றார் அன்றையப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி. அதன்பிறகுதான் இந்திரா காங்கிரசில் சிவாஜி கணேசன் சேர்ந்தார்.

இந்திரா காங்கிரஸில் பணியாற்றிக் கொண்டிருந்த சிவாஜி கணேசனை ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார்கள். ராஜீவ் காந்தியைப் பிரதமராக்குவதற்கு சிவாஜிகணேசன் பாடுபட்டார். அப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் எல்லோரும் க. காங்கிரஸ், மு. காங்கிரஸ், வ. காங்கிரஸ் என்றெல்லாம் ஆரம்பித்தார்கள்.

சிவாஜி கணேசனும் வெளியே வந்து' தமிழக முன்னேற்ற முண்ணனி' என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். சிவாஜி ரசிகர் மன்றத்து பிள்ளைகள் அவருக்குப் பின்னணியாக நின்றார்கள். அப்போது சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. ஜானகி எம்.ஜி.ஆர் அணியும், சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும் இணைந்து செயல்பட்டது. தேர்தலில் நிற்பதற்கு சிவாஜி கணேசன் கட்சி முயற்சித்த போது 50 சீட் கொடுத்தார்கள். தனது சொந்தப் பணத்தை மற்றும் பாங்கில் வழங்கிய கடன்களையும் வைத்து கட்சிக்காக செலவழித்தார். தேர்தலில் நின்றார். தோல்வியும் அடைந்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரது மன்றத்துப் பிள்ளைகள் உடன் நின்றார்கள். மற்றவர்கள் ஓடி விட்டார்கள். சிவாஜி கணேசன் அரசியலில் பல நேரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறார். அரசியலுக்குள்ளே அரசியல் பண்ணுவது அவருக்கு ஒத்து வரவில்லை இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ தான் அரசியலுக்கு வந்ததைப்பற்றி வருத்தப்பட்டார்.

அரசியலே வேண்டாமென்று ஒதுங்கியிருந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனை மீண்டும் அரசியலுக்கு வரவழைத்தவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தனது ஜனதா தளம் கட்சியின் தலைவராகப் பணியாற்றும்படி சிவாஜி கணேசனைக் கேட்டுக் கொண்டார். முன்னாள் மத்திய மந்திரி ஜாணஜ் பெர்னான்டஸ் சிவாஜி கணேசனின் நண்பராக இருந்து வந்ததால் அவரது வேண்டுகோளின்படியும் சிவாஜி ஜனதா தளம் கட்சிக்கு பணியாற்ற வேண்டியதாயிற்று.

கொஞ்ச நாள் ஜனதா தளத்தில் இருந்த சிவாஜிகணேசன் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கட்சியை விட்டு விலகி வெளியே வந்தார். அதன்பிறகு அரசியலில் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை, அனுபவங்களாகக் கற்றுக் கொண்ட பாடங்களை தனது கலையுலக நண்பர்களுக்குத் தெரிவித்தார். அரசியலிலிருந்து வெளியில் வந்த சிவாஜி கணேசன் மீண்டும் நடிகனாகி வலம் வரத் தொடங்கினார்.

சிவாஜிகணேசன் பற்றிய தகவல்களை இந்தியக் கலாச்சார மையத்தில் இருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த பஸ்கால், ஜமால் ஆகியோர் பிரான்சு நாட்டுக்கு வழங்கினார்கள். பிரான்சு நாடு சிவாஜி கணேசனுக்கு 'செவாலியே' அவார்டை வழங்கி கௌரவித்தது.

பிரான்ஸ் நாட்டில் வருடா வருடம் மிகச் சிறந்த நடிகனுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுதான் 'செவாலியே' அதை இந்தியாவைச் சேர்ந்த அதிலும் தமிழனாக விளங்கிக் கொண்டிருக்கிற நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கி கௌரவித்தது.

அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் விருது வழங்கும் விழாவிற்கு தலைமை வகித்தார்கள். டெல்லியிலிருந்து பிரான்ஸ் தூதுவர் மாண்புமிகு பிலிப்பெத்தி சென்னைக்கு வந்து பிரான்ஸ் நாடு கொடுத்தனுப்பிய விருதை சிவாஜிகணேசனுக்கு வழங்கினார். திரையுலக கலைஞர்கள், டெக்னிஷியன்கள், ரசிகர்கள் என இரண்டு லட்ச்ம் பேர் அவ்விழாவில் கூடினர்.

இந்திய அரசு இந்திய நாட்டின் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில்" தாதா சாகிப் பால்கே" விருது மிகவும் மரியாதைக்குரியது. இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குக் காலம் தாழ்த்தி மிகத் தாமதமாக 1997ஆம் ஆண்டு அப்போதைய இந்திய ஜனாதிபதி மாண்புமிகு சங்கர் தயாள் சர்மா வழங்கினார். இந்த விருதைப் பெற்றதற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அழைத்து விழா நடத்திக் கௌரவித்தார்கள். ஸ்ரீலங்காவிலும் இது போன்ற விழாவை நடத்தினார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிவாஜிகணேசன் அவர்களுக்கு தேசபக்தியுள்ள ஒரு இந்தியன். நாட்டின் நல்ல பிரஜை என்பதற்காக வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ" 'பத்மபூஷன்' விருதுகளையே மேலான விருதாகக் கருதினார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

ஒரு நடிகன் என்ற முறையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏற்று நடிக்காத வேடங்களேயில்லை என்று சொல்லலாம். இப்படிப்பட்ட உன்னதமான மாபெரும் கலைஞனாக மக்களால் மட்டுமல்லாமல் உலகக் கலைஞர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மகாகலைஞன் சிவாஜிகணேசன் அவர்கள். அப்படிப்பட்ட கலைஞனுக்கு தனது இறுதிக் காலத்தில் ஒரு கதாபாத்திரத்தை அதாவது தனது சிந்தனையாலும், கொள்கையாலும் சமூகத்தில் புரையோடிப் போன கண்மூடித்தனமான பிற்போக்கு சிந்தனைகளை, சாதி வேறுபாடுகளை, மதவெறியைக் களைய முற்பட்ட "பகுத்தறிவுப் பகலவன்" தந்தை ஈ.வெ.ரா. பெரியாரின் வேடத்தை ஏற்று நடித்து அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற கலைவேட்கை இருந்தது. ஆனால் காலம் அவருக்கு உதவி செய்ய முன் வரவில்லை. அவரது ஆசை நிராசையாகவே நின்று போனது. ஆனால் நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு 'பெரியார'ணக நடிக்கின்ற பாக்கியம் கிடைத்துவிட்டது.




5.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 1952ஆம் ஆண்டு கமலம்மாளை திருமணம் செய்தது வைத்தார்கள். கமலம்மாள் சிவாஜியின் அக்கா மகளாவார். இவர்களுக்கு முதலில் பிறந்த பெண் சாந்தி. இவருடைய கணவர் பெயர் டாக்டர். கே. நாராயணசாமி. ஐ.ஐ.டி-யில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு விஜயலட்சுமி, சத்யலட்சுமி என்ற பெயரில் இரண்டு பெண் குழந்தைகள். அவர்களுக்கும் கல்யாணமாகி குழந்தைகள் பிறந்தன. அடுத்து மூத்த மகன் ராம் குமார். சிவாஜியின் தங்கை பத்மாவதியின் மகள் கண்ணம்மாவைத்தான் அவருக்கத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். துஷ்யந்த், தர்ஷன், ரிஷ்யன். துஷ்யந்த் மட்டும் 'ஜூனியர் சிவாஜி' என்ற பெயரில் 'சக்சஸ்' படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார்.

சிவாஜியின் தம்பி சண்முகத்திற்குப் பிறகு ராம்குமார்தான் சிவாஜி பிலிம்ஸ் வேலைகளை கவனித்து வருகிறார். அதற்கடுத்தவர் 'இளைய திலகம்' பிரபு. அவரது மனைவி பெயர் புனிதவதி. இருவருக்கும் பிறந்த குழந்தைகள் ஐஸ்வர்யா, விக்ரம். விக்ரமிற்கு சமீபத்தில் திருமணம் ஆனது.

சிவாஜியின் இளையமகள் தேன்மொழி. கணவர் டாக்டர் கோவிந்தராஜன். மூத்த மாப்பிள்ளை நாராயணசாமியின் தம்பி. குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்கும் திறமை வாய்ந்த மருத்துவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். பிரியதர்ஷினி அமெரிக்காவில் இருப்பவர். குணால் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருப்பவர்.

சிவாஜியின் தம்பி காலஞ்சென்ற சண்முகம். அவரது மனைவி அலமேலு. இவர் சிவாஜியின் மனைவி கமலம்மாளின் உடன் பிறந்த தங்கை. அவர்களுடைய இரண்டாவது மகன் கிரி. குடும்பத்தோடு சிவாஜி பெரியப்பா குடும்பத்துடன் இருக்கிறார். அவரும் சிவாஜி பிலிம்ஸ் வேலைகளை கவனித்து வருகிறார். கிரியின் மனைவி அனுராதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் ஸ்ரீமத், மற்றொருவர் சிவ்ஸ்ரீ. சண்முகத்தின் மூத்த மகள் முரளி குடும்பத்தோடு அமெரிக்காவில் இருக்கிறார். சிவாஜியின் அண்ணன் தங்கவேலு ஏற்கனவே காலமாகி விட்டார்.

சிவாஜியின் தங்கை பத்மாவதி. அவரது கணவர் பெயர் வேணுகோபால். அவர்தான் சாந்தி திரையரங்கை பல வருஷங்களாக நிர்வாகம் செய்து வருகின்றார். அவர்களுக்கும் பெண், பிள்ளை, பேரன், பேத்திகள் எல்லோரும் இருக்கிறார்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பார்கள். அப்படிப்பட்ட குடும்பம்தான் நாடே போற்றி மகிழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமாகும். இவருக்கு ஏராளமான பேரன், பேத்திகள் உலகம் முழுவதும் நண்பர்கள் சுற்றத்தார் என்று பலர் இருக்கின்றார்கள். நடிகர் திலகம் தலைசிறந்த நடிகர் மட்டுமல்ல. மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தின் தலைவரும் ஆவார்.

தமிழ்த்தாயின் தன்னிகரற்ற கலைஞராக விளங்கிய சிவாஜிகணேசன் பல்வேறு தெலுங்குப் படங்கள், கன்னடப் படங்கள், மலையாளப் படங்கள், இந்தி என்று அனைத்து மொழியினரின் பாராட்டுக்களையும் பெற்று மாபெரும் கலைஞராக வலம் வந்தார். சிறிய வயதில் நடிகராக வேண்டும் என்று ஆர்வப்பட்டு கூத்து, நாடகத்துறை என்று நுழைந்து சினிமாவிற்குள்ளும் காலடி எடுத்து வைத்து தனது ஆற்றலை விரிவுபடுத்தி உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்த மகாகலைஞனாக சிறந்து விளங்கினார். தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தனது மனைவி, மகன், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் சுற்றத்தாரோடு அன்போடும் பாசத்தோடும் எல்லாக் குடும்பத்திற்கும் தலைவராக, குடும்பத்தலைவராக வாழ்ந்து வந்தார்.

எழுபத்தி நான்கு வயதான சிவாஜி ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருதயத்தில் அவருக்கு பேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தப் பட்டது. அதன் காரணமாக ஆண்டுதோறும் அவர் தனது இருதயத் துடிப்பைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதற்காக அவர் அடிக்கடி அப்பல்லோ மருத்துவமனைக்கு வருவதும் போவதுமாக இருந்தார். கடந்த 16.7.2001 அன்று அவர் மூச்சுத் திணறல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது நுரையீரலில் தண்ணீர் சேர்ந்துக் கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்படுவதைக் கண்டறிந்தனர். அதற்காக சிறுநீரகத்தை சுத்தப்படுத்தத் தேவையான டயாலிசிஸ் சிகிச்சை உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த சிகிச்சையை மேற்கொள்ள சிவாஜி மறுத்து விட்டார். இருதய நோய் நிபுணர் எம்.கே. ராமச்சந்திரன் சிறுநீரக சிகிச்சை மருத்துவர் மணி ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர்கள் குழுவே சிவாஜியை கவனிக்கத் துவங்கினர். ஆனாலும் அவரது உடல்நிலையில் மாற்றம் தென்படவில்லை.

இறுதியில் 21.07.2001 இரவு 7.46 மணியில் அனைத்து மொழிக் கலைஞர்களும் அதிசயித்து பார்த்து பிரமித்துப் போன நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூச்சு நின்று போனது. அருகிலிருந்து கவனித்து வந்த சிவாஜியின் மனைவி கமலம்மாள். மூத்த மகன் ராம்குமார், வெளிநாடு சென்றிருந்த இளைய மகன் பிரபு மற்றும் உறவினர்கள் இந்த செய்தி அறிந்து கதறி அழுதனர். தகவல் தெரிந்த நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், விஜய்காந்த், விஜய் உள்ளிட்ட திரையுலகினர் இரவோடு இரவாக மருத்துவமனைக்கு வந்தனர். அஞ்சலியைச் செலுத்தினர். ரசிகர் கூட்டமும் இரவே திரண்டு வந்தது.

அதிகாலையிலேயே நீண்ட கியூ வரிசையில் நின்று லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அன்று முதல் அமைக்கராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா, தி.மு.க தலைவரும் அன்று முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த கலைஞர் மு. கருணாநிதியும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சிவாஜியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். சிவாஜி கணேசன் மறைவையொட்டி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

2001 ஜூலை 23ந் தேதி அன்று சென்னை பெசன்ட் நகர் மின்சார சுடுகாட்டில் தகனம் நடந்தது. அரசு மரியாதையுடன் தமிழ்தாயின் தவப்புதல்வனுக்கு கலைத்தாயின் தலைமகனுக்கு 42 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் சோக இசை முழங்கினர்.

பொதுவாக முதலமைச்சராகவோ, மந்திரியாகவோ இருந்தவர்கள் மரணம் அடைந்தால்தான் அவர்களின் இறுதிச் சடங்கின்போது போலீசார் அணிவகுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை செய்வது வழக்கம். அரசில் எந்தப் பொறுப்பிலுமே இல்லாத ஈ.வெ.ரா. பெரியார் இறந்தபோதுதான் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன. அதற்குப் பிறகு நடிகர் திலகத்தின் இறுதிச் சடங்குதான் அரசு மரியாதையுடன் நடந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 'சக்சஸ்' என்ற வசனத்தை முதன் முறையாகப் பேசி நடித்து தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமான இடத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவுபடுத்துகின்ற வகையில் நினைவுத் தூணை வைத்து கௌரவப்படுத்தியிருக்கின்றார்கள். ஏ.வி.எம் சரவணனும் அவரது மகன் எம்.எஸ்.குகனும். அதை கமலஹாசன் திறந்து வைத்தார். சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு கலந்துக் கொண்டனர். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் படப்பிடிப்பிற்கு வரும் நடிகர் நடிகைகள் புதிய இயக்குனர்கள் நினைவிடத்தில் பூக்களைத் தூவி வணங்கிச் செல்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவாஜி குடும்பத்திற்கு உதவுகின்ற வகையில் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்து 'சந்திரமுகி' படத்தை எடுக்க வைத்தார். அந்தப் படத்தை டைரக்டர் பி. வாசு இயக்கினார். தயாரிப்பாளர்கள் ஜீ. ராம்குமார், ஜீ. பிரபு இருவரும் இணைந்து அந்தப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியிருக்கின்றார்கள்.

நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த 'பராசக்தி' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் சிவாஜி. அவரை நினைவுப் படுத்துகின்ற வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு 'சிவாஜி' என்று பெயரிட்டு மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் எம். சரவணன், எம்.எஸ். குகன் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். இந்தப் படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் உயர்ந்திருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் கலை ஆற்றலைப் போற்றுகின்ற வகையில் அவரது திருவுருவச் சிலையை புதுவை அரசு திறந்து வைத்து கௌரவித்திருக்கிறது.

சென்னை மெரினா கடற்கரையில் தமிழகத்தின் தலைசிறந்த மனிதரும், தன்னிகரில்லா இந்திய கலைஞருமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு முதல்வர் டாக்டர் கலைஞர் சிவாஜியின் நினைவு நாளான 21.7.2006 அன்று சிலை திறந்து வைத்தார். விழாவிற்கு முன்பாக சிவாஜிகணேசன் பற்றி முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் எழுதிய கவிதைப் பாடலை சீர்காழி சிவசிதம்பரம் மேடையில் உருக்கமாகப் பாடினார்.

விழாவில் நடிகர் பிரபு, கே. பாக்யராஜ், விஜயகாந்த், வைரமுத்து, கமலஹாசன், ரஜினிகாந்த், ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி நன்றியுரை வழங்கினார். முதல்வர் டாக்டர் கலைஞர் சிறப்புரையாற்றி விழாவை முடித்து வைத்தார்.

சிவாஜியின் துணைவியார் திருமதி. கமலம்மாள் நேரில் வந்து இந்த விழாவில் கலந்துக் கொண்டார். ராம்குமார்,பிரபு சாந்தி நாராயணசாமி மற்றும் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துக் கொண்டனர். மற்றும் அரசியல் பிரமுகர்கள், கலையுலக பெருமக்கள், பத்திகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -