- Back to Home »
- காளான் தயாரித்தால் நல்ல லாபம் ஈட்டமுடியும் மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கில் தகவல்
திருச்சி: ""தேவையை விட உற்பத்தி மிகக்குறைவாக இருப்பதால், காளான்
தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும்,'' என காளான் வளர்ப்பு
குறித்து விரிவுரையாளர் விஜயகுமார் பேசினார். தமிழ்நாடு மகளிர் தொழில்
முனைவோர் சங்கம் சார்பில், மகளிர் தொழில் முனைவோருக்கான ஒருநாள்
கருத்தரங்கு டிட்டிசியா அலுவலகத்தில் நடந்துது. பாரதிதாசன் பல்கலை
மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை தலைமை வகித்து பேசியதாவது: பெண்கள் இன்று ஏராளமான தொழில் துறையில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், அவர்கள் அமைப்புசாரா தொழிலாளராக அங்கீகரிக்கப்படவில்லை. முறையாக வருமானவரி "ரிட்டன்ஸ்' தாக்கல் செய்து தங்களுக்கான அங்கீகாரத்தை நிலைப்படுத்த வேண்டும். பெண் என்ற குறுகிய வட்டத்துக்குள் நாம் இருக்கக்கூடாது.
இந்திராணி என்ற பெண் ஒருவர் வர்த்தக ரீதியான டிரைவராக செயல்பட்டு
வருகிறார். அவர் "கால் டாக்ஸி' ஓட்டுகிறார். அவர் படும் இன்னல்கள் கொஞ்சம்
நஞ்சமல்ல. அவரது தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும். செப்டம்பர் 15ம் தேதி
திருச்சி, வேலூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மகளிர் சுகாதார மேம்பாட்டுக்காக இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. இதற்காக அரசுக்கு நாப்கின் தயாரித்து வழங்க நாம் அனுமதி கோரியுள்ளோம். இதனால், பெண்களுக்கு கூடுதல் தொழில்வாய்ப்பு ஏற்படும். நாம் தயாரிக்கும் "நாப்கின்'களுக்கு 1.35 ரூபாய் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர். மாதவிடாய் சுகாதார கூட்டமைப்பு மூலம் அதை 2.50 ரூபாயாக உயர்த்திதரக்
கோரியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.சகாளான் வளர்ப்பும், சந்தைப்
படுத்துதலும் குறித்து எம்.ஐ.இ.டி., விரிவுரையாளர் விஜயகுமார் பேசியதாவது:
எதிர்காலத்தில் விவசாயம் (ஆக்ரோ) சார்ந்த தயாரிப்புகளுக்கு நல்ல மவுசு
உள்ளது. வேளான் சார்ந்த காளான் வளர்ப்பில் நல்ல லாபம் உள்ளது. காளானில்
1500 வகை உள்ளது. இதில், இந்தியாவில் 50 வகையான காளான்களும், தமிழகத்தில் நான்கு வகையான காளான்கள் மட்டும் தான் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மொட்டு (ஊட்டி), சிப்பி, பால் ஆகிய மூன்று வகை காளான் தான் இன்று விற்பனையில் உள்ளது. இதில், எந்த வகை பருவத்திலும் வளரக்கூடிய பால் காளான் தான் நல்ல லாபம் தரும். திருச்சியை பொறுத்தவரை பால் காளான் வளர்ப்பு மிகச்சிறந்தது. ஊட்டி காளான் வளர்க்க அதிக செலவாகும். சிப்பிக்கலான் வளர்க்க அதிக பராமரிப்பு தேவைப்படும். ஒரு கிலோ பால் காளான் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகளுக்கு இணையான புரோட்டின் மற்றும் இதர சத்துக்கள் காளானில் கிடைக்கிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் காளான்
சாப்பிடுகின்றனர். எனவே, காளானுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 130 கிலோ மட்டுமே காளான் நாள்தோறும் உற்பத்தி
செய்யப்படுகிறது. தேவையை விட உற்பத்தி மிகக்குறைவாகவே உள்ளது.
மதிப்புக்கூட்டப்பட்ட காளான் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி
உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் காளான் வளர்ப்பில் நிச்சயம் வெற்றி
பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். கோல்டு கவரிங் நகை தயாரிப்பு குறித்து
ராஜேந்திரன், வாழைநாரில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து அனிதா ஆகியோர் பேசினர். தமிழ்நாடு தொழில் முனைவோர் சங்க செயலாளர் திலகவதி நன்றி கூறினார்.