யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரியவருகிறது. 

இனந்தெரியாத மர்ம மனித விவகாரமே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

யாழ். பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியின் மீது யாரோ விஷமிகள் கல்வீசியதுடன் மதில் ஏறிப்பாய்ந்து ஒடியதாகவும் விடுதியில் உள்ள பெண்கள் சிலர் அச்சத்தினால் பீதியுடன் தங்களது சக மாணவர்களுக்கு கைபேசி மூலம் தகவல் கொடுத்ததன் பேரில் ஆண்கள் விடுதியில் இருந்து மாணவர்கள் சிலர் பெண்கள் விடுதி இருந்த இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். 

பல்கலைக்கழக மாணவர்கள் அந்தப் பகுதிக்கு வந்தபோது, திடீரென அங்கு வந்த இராணுவத்தினர் தம்மில் இருவரைத் தாக்கினர் என்றும் மற்றைய மாணவர்களை விரட்டினர் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த விடுதிக் காப்பாளர், மாணவர்களை ஏன் தாக்குகிறீர்கள் என்று இராணுவத்தினரிடம் கேட்ட போது, "அவர்கள் கொட்டன்களுடன் நின்றார்கள் அதனால் தாக்கினோம்�� என்று படையினர் பதிலளித்தனர் எனவும் கூறப்பட்டது. 

மாணவிகள் அச்சத்துடன் நேற்றைய இரவைக் கழித்ததுடன் இன்று சனிக்கிழமை காலையில் சில மாணவிகள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு தங்கள் பொதிகளுடன் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -