சென்னை

மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஜாதியை சொல்லி இழிவுப்படுத்துவதாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டரை கிராமத்தில்,  சுப்பிரமணி என்பவர் ஊராட்சிமன்ற தலைவராக உள்ளார். இவர் மலைவாழ் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அரசு அதிகாரிகள், குறிப்பாக வட்டாட்சியர், கோட்டாட்சியர்,  காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் தரக்குறைவாக நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனக்கு மன உழைச்சல் ஏற்படுவதாகவும், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அரசு அதிகாரிகள்,  தன்னிடம் அத்துமீறி செயல்படுவதாகவும், நேற்று மீனாட்சி சுந்தரம் மற்றும் விஸ்வநாதனிடம் பணம் பெற்றுக்கொண்டு, அரங்கண்ட நல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜி.கே. கண்ணன் உத்தரவுப்படி,  உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமை காவலர் வேல்முருகன் ஆகியோர் தேவனூர், வீரபாண்டி, வைப்பூர் பகுதியைச் சேர்ந்த சிலருடன் காவல்துறையினர் அரசுக்கு சொந்தமான ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடையை தூர்த்ததாகவும், வனத்துறை சார்பில் நடப்பட்ட மரங்களை பிடிங்கியதாகவும் கூறினார். இதனைதடுத்த தன்னை உதவி ஆய்வாளர் தனது ஜாதியை சொல்லி இழிவுப்படுத்தி மிரட்டியதாகவும், கூறியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் ராஜமாணிக்கம், கோட்டாட்சியர் ஆனந்தன் ஐ.ஏ.எஸ்., ஆகியோர் தொடர்ந்து இருளர் இனத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவரை தரக்குறைவாக நடத்தி வருவதாக தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்து அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர், இருளர் இனத்தைச் சேர்ந்த தன்னை இழிவுப்படுத்தி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும், அதனை ஏற்க மறுப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -