புதுக்கோட்டை: எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளக் கூட தகுதியில்லாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் பெயரைச் சொல்லி ஆதாயம் தேடுவதாக நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அம்மாவட்ட அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்கக் கூட்டம் நடந்தது. அதில் ராமராஜன் பேசியதாவது,

தேர்தல் நேரத்தில் அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் நிறைவேற்றி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். தனது ஆட்சியில் அரசு கஜானாவை காலி செய்தது தான் கருணாநிதி செய்த சாதனை. அது போன்ற சூழல் இனி உருவாகாது.

ஜெயலலிதா தலைமையிலான நேர்மையான, தூய்மையான அதிமுக அரசு தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது. ஏழை, எளிய மக்களும், பெண்களும் அதிமுக பக்கம் உள்ளனர். வரவிருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி.

இந்த வெற்றியின் மூலம் ஜெயலலிதா யாரைக் கையைக் காட்டுகிறாரோ அவர் பிரதமராகும் வாய்ப்பு உருவாகும். மேடைக்கு மேடை கருணாநிதி புகழ் பாடியவர் தான் விஜயகாந்த். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளக்கூட அருகதையில்லாத விஜயகாந்த் அவர் பெயரைச் சொல்லி ஆதாயம் தேடி வருகிறார்.

குடும்ப நலனுக்காக மக்கள் நலனை மறந்த கருணாநிதியை மக்கள் வீட்டிற்கு அனுப்பியது போன்று வரும் காலத்தில் விஜயகாந்தையும் அனுப்புவார்கள் என்றார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -