திருப்பதியில், ஹோட்டல் குளியலறையில் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்.ஜானகி. இப்போதும் மழலை கொஞ்சும் குரலில் பாடி அசத்தும் திறமை உடையவர். இவர் திருப்பதியில் நடந்து வரும் அன்னமாச்சாரியா கீர்த்தனை விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உள்ள குளியலறையில் கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டது. இதனையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் ஜானகி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தலையில் 7 தையல்கள் போட்டனர்.
இது பற்றி அவரது மகன் கூறுகையில், 'அம்மா தற்போது நலமாக உள்ளார், எங்களிடம் சிரித்து பேசுகிறார், விரைவில் உடல் நலம் தேறி தொடர்ந்து பாடல்கள் பாடுவர், என்றார்.
ஜானகி உடல்நலம் குறித்து அங்குள்ள மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஜானகி அவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருக்கிறது. இதனால் அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இருக்கிறது. லேசான காயம் தான், பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளார்.
