டி.வி. சேனல்களுக்கு
கட்டுப்பாடு விதிக்க வேண்டும்

புது தில்லி, 
பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட செய்திகளை ஒலிபரப்புவதில் டி.வி. சேனல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்று செய்தி ஒலிபரப்பு தர ஆணையத்திடம் (என்பிஎஸ்ஏ) டில்லி போலீஸ் புகார் அளித்துள்ளது.

தில்லியில் சமீபத்தில் இஸ்ரேல் தூதரக காரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக டி.வி.சேனல்கள் வெளியிட்ட பல்வேறு வகையான செய்திகளினால் டில்லி காவல்துறை கடும் அதிருப்தி அடைந்துள்ளது

எனினும் எந்த குறிப்பிட்ட செய்தியையோ அல்லது டி.வி.சேனலையோ சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்படவில்லை.

எவ்வித பரிசீலனையும் இல்லாமல் அடிப்படை ஆதாரமற்ற வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது என்று டி.வி. சேனல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமென்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

"டி.வி.க்கள் ஊகத்தின் அடிப்படையில் வெளியிடும் செய்திகள் எங்கள் விசாரணைக்கு பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமாக பயங்கரவாதிகளின் நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்களில் அனைத்துத் தரப்பினரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். எனவே டி.வி.சேனல்களுக்கு இதனை சுட்டிக் காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு நியாயத்தை பணிவுடன் தெரிவித்திருந்தோம்.

கடந்த வாரம் அனுப்பப்பட்ட இக்கடிதத்துக்கு என்பிஎஸ்ஏ-யிடம் இருந்து பதிலும் வந்தது. அதனை அனைத்து டி.வி.சேனல்களுக்கு அனுப்பியுள்ளோம். பல விஷயங்களில் போலீஸôர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னதாகவே டி.வி.க்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன' என்று தில்லி நகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ராஜன் பகத் கூறினார். எனினும் எந்த செய்தியில் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டது என்று தெரிவித்தால், அது தொடர்பாக ஆய்வு செய்து டி.வி.சேனல்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று என்பிஎஸ்ஏ கூறியிருப்பதாகத் தெரிகிறது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -