ரயில்வே போலீஸ் சட்ட திருத்தம் மூலம் மாநில அதிகாரத்தில் தலையிடுகிறது மத்திய அரசு

சென்னை,

ரயில்வே பாதுகாப்புப் படை சட்டத்தை திருத்துவதன் மூலம் மாநில அரசின்அதிகாரத்தில் தலையிட மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்த குறித்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ரயில்வே பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளருக்கு ரயில்வே வாரியத்தின் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ரயில் நிலையப் பாதுகாப்புப் பணிகள் தொடர்பான குற்றங்கள் மற்றும் செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ரயில்வே பாதுகாப்புப் படைக்கு முற்றிலும் வழங்க அந்த திருத்தத்தில் வகை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவுகளை காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அந்த காவல் நிலையங்களுக்கு பொறுப்பாக அதிகாரிகளை நியமிக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் மாநில ரயில்வே போலீஸ் பாதுகாப்புப் படையுடன் மூன்று அடுக்கு பாதுகாப்பு அம்சம் உள்ளது. இதைத் தவிர்த்து, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் மாவட்ட போலீஸ் இவற்றை மட்டுமே கொண்ட இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அம்சத்துக்கு சட்டத் திருத்தம் வழி செய்கிறது.

பல மாநிலங்களின் வழியே செல்லும் நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், மாநிலங்களில் உள்ள ரயில்வே போலீஸாருடன் தொடர்பு இருப்பது அவசியமாகிறது. ரயில்களிலும், பிளாட்பாரங்களிலும் பயணிகளின் பகுதிகளில் நடக்கும் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கண்டறிந்து அதைத் தடுக்க திறமையான அமைப்பு தேவை. இப்போதைய சட்டத் திருத்தத்தின் மூலம் ரயில்வே பாதுகாப்புப் பணியில் மாநில ரயில்வே போலீஸாரின் பங்கு இல்லாமல் போகும். அவர்கள் இல்லாத காரணத்தால், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், மாவட்டத்தில் உள்ள போலீஸாருக்கும் இடையேயுள்ள தொடர்பு சரிவர இல்லாமல் அற்றுப் போகும்.

மாநிலங்களில் உள்ள ரயில்வே போலீஸார் ரயில் நிலையங்களில் திருட்டு போன்ற சம்பவங்களை மட்டும் விசாரிப்பதில்லை. ரயில் பாதைகளில் நடக்கும் விபத்துகள், சாவுகள் உள்ளிட்டவை பற்றியும் அவர்கள் விசாரிக்கின்றனர். சிறிய வழக்குகளுக்கும்,

ரயில் நிலையங்களும் ரயில்களும் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அதிகார வரம்புக்குள் மட்டும் இருக்கும் பகுதியாக மாறும் நிலை ஏற்பட்டால், உள்ளூர் அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்குக்கூட ரயில் நிலையங்களுக்குள் மாவட்ட போலீஸார் நுழைய முடியாத நிலை ஏற்படும்.

சுருக்கமாகச் சொன்னால், மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கும் ரயில்வே நிலையம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் தீவு போலாகி விடும்.

ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ள இருக்கும் இந்த உத்தேச திருத்தமானது, மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடக்கூடிய அப்பட்டமான முயற்சி என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

""பொது ஒழுங்கு'' மற்றும் ""காவல்'' என்பவை மாநில அரசின் அதிகார வரம்புக்குள்பட்டவை. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் அதிகார வரம்புகள் குறித்த அட்டவணையில் திருத்தம் செய்து இதை மாற்ற முயற்சிப்பது, மாநில அதிகாரங்களில் தலையிடக் கூடியது என்பது தெளிவாகத் தெரியக் கூடிய விஷயம். இது நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்குப் பாதகமாக அமைந்துவிடும்.

மேலும், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரத்தை வழங்கும் போது அது இந்திய போலீஸ் சட்டத்தை மீறும் வகையில் அமைந்து விடும். எனவே, ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த தகுந்த அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்கிட வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.