சென்னை

இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து மீன்பிடி விசைப் படகுகளில் தமிழக மீனவர்கள் கடந்த 25-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களையும், அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரங்களை தமிழக அரசு அணுகி கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், அவர்களின் 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று தலைமன்னார் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமையன்று 22 மீனவர்களையும், அவர்களின் 5 படகுகளையும் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுவித்தது. 5 படகுகள் உள்பட மீனவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவர்களை இந்திய கடலோர காவலர் படையினர் தமிழகத்துக்கு புதன்கிழமை அழைத்து வருவார்கள் என்று மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -