தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’மதுரையில் அக். 23-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிகள், அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகள், அனைத்து மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தென் மாவட்டத் தலைமை இடங்களில் நவ. 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கும், தமிழக அரசு கூடங்குளம் திட்ட வேலைகளை நிறுத்திவைக்க விடுத்த வேண்டுகோளுக்கும் மத்திய அரசு மதிப்பளிக்காமல், அணு மின் திட்ட வேலைகளை தொடர்ந்து செய்து வருவதுடன், அணு உலையை அமைத்தே தீருவோம் என்று பிடிவாதம் காட்டி வருகிறது.
கூடங்குளம் மக்களின் போராட்டத்தை நசுக்க நினைத்தால், ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் நிலை ஏற்படும்.
மின் பற்றாக்குறையைப் போக்க அணு உலையைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறுகிறது மத்திய அரசு. 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய ஒகேனக்கல் நீர் மின் திட்டத்துக்கு இதுவரை மத்திய அரசு அனுமதி அளிக்காமல் பிடிவாதம் காட்டி வருகிறது.
ஒகேனக்கல் திட்டம் போல தமிழகத்தில் பல சிறு சிறு மின் திட்டங்கள் அமைக்கும் வாய்ப்பு ஏராளமாக உண்டு.
ஒகேனக்கல் திட்டம் போல தமிழகத்தில் பல சிறு சிறு மின் திட்டங்கள் அமைக்கும் வாய்ப்பு ஏராளமாக உண்டு.
காற்றாலை மின் உற்பத்தியை இன்னும் பெருக்க முடியும். சூரிய வெப்பதை பயன்படுத்தி வீட்டுக்கு வீடு தேவையான மின் உற்பத்தியை செய்ய வழியுண்டு. இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அணு உலையை அமைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதற்கு இந்த உலையின் கழிவிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியம் அணு குண்டு செய்ய பயன்படும் என்பதே காரணமாகும்.
அணு உலை அமைக்க பக்கத்து மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஒப்புக் கொள்ளாததால், தமிழகத்தில் கட்டப்படுகிறது. கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் அணு மின்சாரத்தில் சிறு பகுதி மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்படும். ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு தமிழக மக்களை மட்டுமே பாதிக்கும். மத்திய அரசின் இந்தத் திட்டம் தமிழக மக்களை ஏமாளிகளாக்கும் திட்டமாகும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர, பெரும்பாலான கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில், மத்திய அரசு பிடிவாதம் காட்டுவது மக்கள் கருத்தை மதிக்காத போக்காகும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் திமுகவை தோற்கடித்து, அதிமுகவை வெற்றிப் பெறச் செய்தார்கள். உள்ளாட்சித் தேர்தலிலும் அதுவே பிரதிபலித்திருக்கிறது.
தமிழக மின் பற்றாக்குறையைப் போக்க நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும்.
காவிரி பிரச்னையில் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளமும் தங்கள் மாநிலத்தில் உற்பத்தியாகும் தண்ணீர் தங்களுக்குச் சொந்தம் என்று சொல்லும் போது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்குச் சொந்தம் என்று சொல்வதில் நியாயம் உண்டு’’ என்று கூறினார்.
