மரண தண்டனைக்கு எதிராக பேரறிவாளன், சாந்தன், முருகன் தொடர்ந்துள்ள வழக்கில் உயர்நீதிமன்றத்தின் நோட்டீல் கிடைத்தவுடன் பதில் அனுப்பப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறும் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் குறித்து என்ன பதில் அனுப்பப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, நீதிமன்றத்தின் நோட்டீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும், நோட்டீஸ் கிடைத்தவுடன் உரிய பதில் அனுப்பும் நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளும். இதுவரை அதிகாரப்பூர்வ நோட்டீஸ் நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை. என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு உரிமை உள்ளது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மத்திய அரசு எடுக்கும் என்றார்.