இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் கடைசி கட்டத்தில் பிரிந்து சென்ற நபர்களை கண்டுபிடித்து அவர்களை குடும்பத்துடன் இணைக்க ஒரு முக்கியமான திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக யுனிசெப் என அழைக்கப்படும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
யுனிசெப்பின் இந்நடவடிக்கை 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பமானது.
இந்த வேலைத் திட்டத்தில் முன்னேற்றங்கள் பலவற்றை கண்டுள்ள யுனிசெப், நிர்க்கதியான பல சிறுவர்களை அவர்களது குடும்பத்துடன் ஒன்றிணைத்துள்ளது.
எனினும் மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் காணாமல் போயுள்ளதுடன் இளைஞர்கள் பற்றிய விபரங்களும் தெரியவில்லை.
காணாமல் போயுள்ள சிறுவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வட பகுதியில் இரண்டு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
உள்ளூர் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் யுனிசெப்பின் இத்திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குறைந்தது 582 சிறுவர்கள் காணாமல் போயிருக்கலாம் என யுனிசெப் கணிப்பிட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களை கண்டுபிடித்துத் தருமாறு தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதென யுனிசெப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் 45 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 57 சிறுவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இறுதிக் கட்ட யுத்தத்தில் 30 சதவீத சிறுவர்கள் காணாமல் போனதாகவும் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை விடுதலைப் புலிகள் பணிக்கமர்த்தியதாகவும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வயதுக்கு வந்தவர்கள் 2000 பேர் காணாமல் போயுள்ளமை குறித்து தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறியுள்ள யுனிசெப் அவர்களின் விபரங்கள் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -