கேரள அரசு, மத்திய அரசைக் கண்டித்து இன்று தேனியில் விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதம்

தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஐவர் குழுவின் அறிக்கைப்படி தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. இதற்கிடையே இரு மாநில எல்லைகளிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு மாநிலங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளது. இதில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.