முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் ஸ்ரீதர் வாண்டையார் பேட்டி


தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
முக்குலத்தோரில் இருக்கும் எல்லா பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு பெற்று தந்த பின்பு தான் எனது பயணம் முடிவடையும். இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து தமிழர்கள் அதிக அளவில் பெற்றுள்ளனர்.
 
இலங்கையில் தமிழினத்தை படுகொலை செய்த மனிதநேயம் இல்லாத ராஜபக்சேவையும், அவரது தம்பி கோத்தபயராஜபக்சேவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தூக்குத்தண்டனை பெற்று தர வேண்டும். ஐ.நா.சபையானது பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் 193-வது நாடாக சூடானை உருவாக்கியது.
 
அதேபோல் இலங்கை தமிழர்களிடையே வாக் கெடுப்பு நடத்தி 194-வது நாடாக தமிழீழத்தை உருவாக்க வேண்டும். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்.  
 
 இல்லையெனில் மக்களை அழைத்து சென்று மதுரை விமான நிலையத்தின் பெயரை நாங்களே மாற்றிக் கொள்வோம். காவிரி பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இப்படி வழங்கினால் விவசாய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க முடியும். நல்ல நிலையில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும். குடியிருக்க நல்ல முறையில் வீடு கட்டிக் கொள்ள முடியும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.